×

‘விசைத்தறியாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம்’; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் 11ம் தேதி பாராட்டு விழா: மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள்

கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுதினம் பாராட்டு விழா நடக்கிறது. அன்றையதினம் அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (11ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு) ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். காலை 11 மணிக்கு பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹால் வளாகத்தில், அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா நடக்கிறது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திமுகவில் இணையும் நபர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்கிறார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் செய்துள்ளார். மாலை 5 மணிக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால் ரோடு அருகே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

தமிழக அரசு சார்பில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை, 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து இவ்விழா நடக்கிறது. இவ்விழா நிறைவுபெற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 7 மணியளவில் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,CM G.K. Praise ,Stalin Temple , '1000 units of free electricity for electricians'; Appreciation ceremony for Tamil Nadu Chief Minister M. K. Stalin on 11th in Coimbatore: 3 thousand people from alternative parties join DMK
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து